தமிழ் இலக்கணம் - சொல் வகை

சொல் வகை
தமிழில் சொற்கள் நான்கு வகைப்படும். அவை வருமாறு:
1) பெயர்ச்சொல்
2) வினைச்சொல்
3) இடைச்சொல்
4) உரிச்சொல்
(எடு.)
மலை - பெயர்ச்சொல்
சென்றான் - வினைச்சொல்
- இடைச்சொல்
மா - உரிச்சொல்
சொற்களை இயல்பும் இடமும் நோக்கி வேறு நான்கு வகையாகப் பிரிப்பர். அவை வருமாறு:
1) இயற்சொல்
2) திரிசொல்
3) திசைச்சொல்
4) வடசொல்

  • இயற்சொல்:

  • இயற்சொல் என்பது தமிழ் வழங்கு நிலத்தில் கற்றவர்க்கும் கல்லாதவர்க்கும் பொருள் விளங்குமாறு தொன்றுதொட்டு வழங்கிவரும் சொல்லாகும்.
    (எ.டு.) மரம், வந்தான்
    செந்தமிழ் ஆகித் திரியாது யார்க்கும்
    தம்பொருள் விளக்கும் தன்மைய இயற்சொல்
                                         (நன்னூல்:271)
     



  • திரிசொல்:
  • திரிசொல் என்பது கற்றவர் மட்டுமே பொருள் உணரக்கூடியது. இஃது ஒரு பொருள் குறித்த பல சொல்லாகவும், பல பொருள் குறித்த ஒரு சொல்லாகவும் வரும்.
    (எ.டு)
    கிள்ளை, தத்தை, சுகம் -
    கிளி என்னும் ஒரு பொருள் குறித்த பல திரிசொல்.
    வாரணம் -
    யானை, கோழி, சங்கு முதலிய பல பொருள் குறித்த ஒரு திரிசொல்.

    ஒரு பொருள் குறித்த பலசொல் ஆகியும்
    பலபொருள் குறித்த ஒருசொல் ஆகியும்
    அரிதுணர் பொருளன திரிசொல் ஆகும் (நன்னூல் : 272)
                                    



  • திசைச்சொல்:

  • திசைச்சொல் என்பது செந்தமிழ் வழங்கும் நிலம் தவிர்த்த கொடுந்தமிழ் வழங்கும் நிலங்களில் வழங்கும் சொல்லும், வேற்றுமொழி பேசுவோர் தமிழ் நிலத்தில் வந்து தம் கருத்தைக் குறிக்க வழங்கும் சொல்லும் ஆகும்.
    (எடு.)
    சிறுகுளம் - இதனைப் ‘பாழி என்பர் பூழிநாட்டார்;கேணி என்பர் அருவாநாட்டார்.

    செந்தமிழ் நிலஞ்சேர் பன்னிரு நிலத்தினும்
    ஒன்பதிற்று இரண்டினில் தமிழொழி நிலத்தினும்
    தங்குறிப் பினவே திசைச்சொல் என்ப
                                     (நன்னூல் : 273)


  • வடசொல்:

  • வடசொல் என்பது, ஆரியத்திற்கும் தமிழுக்கும் உரிய பொது எழுத்தாலும், சிறப்பெழுத்தாலும் இவ்விருமொழிகளுக்கும் உரிய எழுத்தாலும் வழங்கப்படும் சொல்லாகும். இது தமிழ்ச்சொல்லுக்கு ஒப்பாக, வடதிசை மொழியான ஆரியத்திலிருந்து தமிழில் கலந்து வழங்கும் சொல்லாகும்.
    (எடு.)
    காரியம், காரணம் - பொது எழுத்தால் அமைந்தன.
    போகி, சுத்தி - சிறப்பெழுத்தால் அமைந்தன.
    கடினம், சலம் - இருவகை எழுத்தாலும் அமைந்தன.

    பொதுவெழுத் தானும் சிறப்பெழுத் தானும்
    ஈரெழுத் தானும் இயைவன வடசொல்
                                 (நன்னூல் : 274)

    click and download pdf file                        Click and download image file