# யூ.பி.எஸ்.சி. தேர்வை வென்றவர் - ஐ.பி.எஸ். ஆன பேருந்து ஓட்டுநர்!

சென்னையின் தனியார் பொறியியல் கல்லூரி மாணவர் பேருந்தை ஓட்டிய கா.சிவசுப்ரமணி, ஐ.பி.எஸ். ஆகியுள்ளார். இவருக்கு, 2010-ம் வருட பேட்ச்சில், ஒடிசா மாநிலப் பிரிவில் ரூர்கேலாவின் பயிற்சி ஏ.எஸ்.பி., மல்காங்கிரியில் சப்டிவிஷன் ஆபிஸர் மற்றும் ஏ.எஸ்.பியாக இருந்து தற்போது ராயகடா மாவட்ட எஸ்.எஸ்.பியாகப் பணியாற்றுகிறார். 

ஓட்டுநராக கல்லூரியில்…
விழுப்புரம் மாவட்டம் நேமூர் கிராமத்தில் பிறந்து தமிழ்வழிக் கல்வியில் படித்தவர் சிவசுப்ரமணி. மேற்படிப்பு கடலூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் பொருத்துனர் பிரிவில் பயின்றார். ஆரம்பத்தில் குறுகிய காலத்துக்கு ஒரு இடத்தில் வேலை செய்துவிட்டு பிறகு நண்பர்களுடன் சேர்ந்து ஊரப்பாக்கத்தில் லாரி மற்றும் பேருந்து பணிமனை தொடங்கினார். அப்போது சென்னை எஸ்எஸ்என் பொறியியல் கல்லூரியின் 30 பேருந்துகளைப் பராமரிக்கும் பணி கிடைத்தது. அப்படியே பேருந்தின் ஓட்டுநராகவும் வேலை செய்தார். அப்போது, அவரது ஒன்றுவிட்ட சகோதரர் ரமேஷ், யூ.பி.எஸ்.சி.-ல் சென்ட்ரல் செக்ரடரியட் சர்வீஸ் பெற்ற செய்தி, ‘யூ.பி.எஸ்.சி. பாஸ் செய்த விவசாயி மகன்’ என்ற தலைப்பில் 1999-ல் வெளியானது. இதைப்படித்த சிவசுப்ரமணிக்கு தானும் அரசு அதிகாரியாக வேண்டும் என முதன்முறையாகத் தோன்றியது. 

கல்லூரிப் பேருந்தை ஓட்டிய நேரம் போக மற்ற நேரங்களில் கல்லூரி நூலகத்தில் அனுமதி வெற்று யூ.பி.எஸ்.சி. சம்பந்தமான புத்தகங்களைத் தேடி படிக்க ஆரம்பித்தார். ஆனால் பட்டப் படிப்பு இல்லாமல் யூ.பி.எஸ்.சி. எழுத முடியாது என்பதால் சொந்த கிராமத்துக்கே திரும்பினார். விவசாயம் செய்தபடியே பிளஸ் டூ மற்றும் பி.ஏ. வரலாறு ஆகியவற்றை அஞ்சலில் படித்துத் தேர்ச்சிபெற்றார். அதை அடுத்து, அரசு பணி மற்றும் வங்கிகளுக்கான தகுதித்தேர்வுகளையும் எழுதினார். இவற்றில் வெற்றி கிடைக்கவில்லை. ஆனால் சிறப்பான பயிற்சி கிடைத்தது. ஆறு முறை யூ.பி.எஸ்.சி. முயன்றவருக்கு இறுதியில் ஐ.பி.எஸ். கிடைத்தது. 

பயிற்சி நிலையம் கட்டாயம் இல்லை
“முதல் இரண்டு முயற்சிகளில் முதல்நிலை தேர்வில் வென்றாலும் இரண்டாம்நிலை தேர்வில் வரலாறு பாடத்தில் சறுக்கினேன். மூன்றாவது முறை தமிழ் இலக்கியத்துடன் விருப்பப் பாடமாகப் புவியியலையும் எடுத்தபோது, இரண்டாம் நிலையில் வெற்றி கண்டேன். ஆனால் நேர்முகத் தேர்வில் வெற்றியை வெறும் 8 மதிப்பெண்களில் தவற விட்டேன். அப்போது மனம் உடைந்த எனக்கு சகோதரர் இரமேஷ் ஊக்கம் அளித்தார். அதே உத்வேகத்தில் முயற்சி செய்து ஆறாவது முறையில் ஐ.பி.எஸ். ஆனேன்” என்கிறார் சிவசுப்ரமணி. 

யூ.பி.எஸ்.சி.க்கு முயற்சி செய்தபோது விருத்தாச்சலம், திருச்சி ஆகிய ஊர்களில் ரயில்வேயில் வேலை செய்தார் சிவசுப்ரமணி. அப்போது யூ.பி.எஸ்.சி.க்கு தமிழக அரசின் வேலைவாய்ப்பு அலுவலக துணை இயக்குநரான சுரேஷ்குமாரின் ‘தன்னார்வ பயிலும் வட்டம்’ பெரிதும் உதவியது. 
‘தனியார் பயிற்சி நிலையங்களில் படித்தால் யூ.பி.எஸ்.சி. தேர்வுகளில் தேர்ச்சிபெற முடியும் என்றில்லை. இந்த தேர்வுக்குத் தயாராகும் நண்பர்களிடமும் சீனியர்களிடமும் சந்தேகங்களைக் கேட்டுதான் நான் தயாரானேன். பள்ளியில் தமிழ்வழிக் கல்வி படித்தாலும், முயற்சி செய்து ஆங்கில நூல்களையே படிப்பது நல்லது. தமிழில் படித்து அதை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பது என்பது கடினமானது. இதில், நேரமும் வீணாகும். நேர்முகத் தேர்வை சந்திக்க மாதிரிப் பயிற்சிகள் அவசியம்’ என்கிறார் சிவசுப்ரமணி. 

பணி அனுபவம்
மாவோயிஸ்ட் நடமாட்டம் அதிகம் உள்ள மாநிலமாக ஒடிசா இருப்பதால் அங்கு பொறுப்பேற்கப் பொதுவாக அதிகாரிகள் தயங்குகிறார்கள். ஆனால் சிவசுப்ரமணி ஒடிசாவில் நியமிக்கப்பட்டபோது மகிழ்ந்தார். அவருடைய கறாரான நடவடிக்கையால் ஒடிசா காவல்துறையினர் ‘கமாண்டர்’ எனும் பட்டப்பெயரில் அழைக்கின்றனர். ‘ஐ.பி.எஸ். பெறுவது வெற்றிக்கான அடிப்படையே தவிர முழுமையான வெற்றி அல்ல. இதில் சிறப்பாக செயலாற்றி மக்களுக்கு நற்பணிகள் செய்வதில்தான் உண்மையான வெற்றி உள்ளது’ என்கிறார் சிவசுப்ரமணி. 
நான் படித்தவை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Previous Page Next Page Home

எமது தளத்தின் புதிய தகவல்களை மின்னஞ்சலில் பெற

Guestbook

உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு ஸ்டெடி மெடிரியலை இ.மெயிலில் இலவசமாக பெறுங்கள்.
இமெயிலை பதிவு செய்ய இங்கே சொடுக்கவும்
இமெயில் இல்லாதவர்கள் புதிய இமெயில் முவரியை பெற