7th Samacheer Kalvi Tamil Text book Notes for TNPSC, TET, PG TRB Exams
தமிழர் வளர்த்த நுண்கலைகளின் வரிசையில் முன்னணியில் நிற்பது ஓவியக்கலை
கி.மு. 2000 ஆண்டுகட்கு முற்பட்ட காலத்தில் மக்கள் தாம் தங்கிய மலைக்குகைகளிலும் பாறைகளிலும் கோட்டோவியங்கள் வரைந்தனர்.
தமிழ்நாட்டில் சங்க காலத்திற்கு முன்னரே ஓவியங்கள் வரையப்பட்டன. தாம் வரைந்த ஓவியங்களை முதலில் கண்ணெழுத்து என்றே வழங்கியுள்ளனர்.
தமிழ் இலக்கியத்தில் எழுத்து என்பதற்கு ஓவியம் எனப் பொருள் என கூறும் நூல்கள் பரிபாடல், குறுந்தொகை.
ஓவியம் வரைதற்கு நேர்கோடு, கோணக்கோடு, வளைகோடு முதலியன அடிப்படையாகும். இவ்வாறு வரையப்படுபவை கோட்டோவியங்கள் எனப்படும்.
தொல்காப்பியம் நடுகல் வணக்கம் பற்றிக் கூறுகிறது. நடுகல்லில் போரில் வீரமரணம் எய்திய வீரனது உருவம், பெயர், பெருமைக்குரிய செயல் முதலியனவற்றைப் பொறிக்கும் பழக்கம் இருந்தது.
சிற்பி, தான் செதுக்கவிருக்கும் உருவத்தை முதலில் வரைந்து பார்த்த பின்னரே, அவ்வோவியத்தைக்கொண்டு கல்லில் உருவம் அமைத்தல் மரபு.
ஓவியக்கலை ஓவு, ஓவம், ஓவியம், சித்திரம், படம், படாம், வட்டிகைச் செய்தி எனப் பல பெயர்களால் வழங்கப்பெற்றது.
ஓவியக் கலைஞர் ஓவியர், ஓவியப்புலவன், கண்ணுள் வினைஞன், சித்திரக்காரர், வித்தக வினைஞன், வித்தகர், கிளவி வல்லோன் என அழைக்கப்பட்டார்.
ஓவியர் எண்ணங்களின் எழுச்சியைப் பல வண்ணங்களின் துணைகொண்டு எழுதுவோராதலின் கண்ணுள் வினைஞர் எனப் புகழப்பெற்றார்.
நச்சினார்க்கினியர் தம் உரையில் ஓவியருக்கு, ‘நோக்கினார் கண்ணிடத்தே தம் தொழில் நிறுத்துவோர்’ என இலக்கணம் வகுத்திருக்கிறார்.
ஓவிய நூலின் நுணுக்கத்தை நன்கு கற்றுப் புலமைபெற்ற ஆசிரியர் ஓவியப் புலவன் எனப் போற்றப்பட்டார்.
ஓவியக் கலைஞர் குழுவை ஓவிய மாக்கள் என்றழைத்தனர்.
ஆண் ஓவியர் சித்திராங்கதன் எனவும், பெண் ஓவியர் சித்திரசேனா எனவும் பெயர் பெற்றிருந்தனர்.
ஆடல் மகள் மாதவி, ‘ஓவியச் செந்நூல் உரை நூற்கிடக்கையும் கற்றுத்துறை போகப் பொற்றொடி மடந்தையாக இருந்தனள்’ எனச் சிலம்பு பகர்கிறது. இதிலிருந்து ஓவியக் கலைக்கெனத் தனி இலக்கண நூல்கள் இருந்தன என்பதனைத் தெரிந்துகொள்ளலாம்.
வண்ணந்தீட்டும் கோல் தூரிகை, துகிலிகை, வட்டிகை எனப்பட்டது.
வண்ணங்கள் குழப்பும் பலகைக்கு வட்டிகைப் பலகை எனப் பெயரிட்டிருந்தனர்.
ஓவியம் வரையப்பட்ட இடங்கள் சித்திரக்கூடம், சித்திரமாடம், எழுதுநிலை மண்டபம், எழுதெழில் அம்பலம் என வழங்கப்பட்டன.
இறை நடனம் புரிவதற்கே சித்திர சபை ஒன்றனை ஏற்படுத்தியுள்ளனர்.
புறநானூற்றில், ஓவத்தனைய இடனுடை வனப்பு என வீட்டின் அழகை ஓவியத்திற்கு ஒப்ப வைத்துக் போற்றுகிறப்படுகிறது.
சுடுமண் சுவர்மீது வெண்சுதை (சுண்ணாம்பு) பூசிச் செஞ்சாந்துகொண்டு ஓவியங்கள் தீட்டினர். சுவர் இருந்தால்தான் சித்திரம் வரையமுடியும் என்னும் பழமொழி இவ்வாறுதான் உருவாயிற்று.
மரப்பலகை, துணிச்சீலை, திரைச்சீலைகளில் ஓவியம் எழுதினர்.
நாடகமேடைகளில் பல வண்ணங்களில் கவின்மிகு காட்சிகள் தீட்டப்பட்ட திரைச்சீலைகள் தொங்கினவற்றை ‘ஓவிய எழினி’ என்ற சொல் கொண்டு அழைத்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக