தினமும் காலையில் கட்டாயம் செய்ய வேண்டிய நான்கு விஷயங்கள்!

புத்துணர்ச்சியுடன் தொடங்கும் ஒவ்வொரு நாளின் புதிய விடியலையும், அந்த நாளில் நாம் செய்யும் நான்கு விஷயங்கள் நம்மை மேலும் உற்சாகப்படுத்தும். அவை i) தூங்கி எழுதல், ii) குளித்தல், iii) சூரிய ஒளி நம் மீது படுதல், iv) காலை உணவு சாப்பிடுதல். இந்த நான்கு முறைகளையும் எப்படிச் செய்ய வேண்டும், அவற்றால் கிடைக்கும் நன்மைகள் குறித்த விபரங்களைக் கூறுகிறார் கிராமியக் கலைப் பயிற்சியாளரான மாதேஸ்வரன்.

1. விடியற்காலையில் எழுதல்!

தூக்கம்தான் ஒரு மனிதனுக்கு மிக முக்கிய ஆரோக்கியத்தைக் கொடுக்கும். அதனால் இரவு நேரங்களில் செல்போன், டிவி பயன்பாடுகளைக் குறைத்துக் கொண்டு, இரவு 9 - 10 மணிக்குள் தூங்குவதை கட்டாயமாக்கிக்கொள்ள வேண்டும். அப்படிச் செய்வதால் காலை 5 - 6 மணிக்கெல்லாம் இயல்பாகவே தூக்கம் கலைந்துவிடும்.

விடியற்காலையில் நாம் சுவாசிக்கும் காற்று, நம் உடலுக்கு புத்துணர்ச்சியைக் கொடுப்பதுடன் சுவாச மண்டலத்தை நல்ல முறையில் இயங்கச்செய்யும். அந்த நேரம் தவறாது யோகா, நடைப்பயிற்சி, உடற்பயிற்சி என நமக்கு ஏதுவான எதாவது ஒரு பயிற்சியையாவது கட்டாயமாகச் செய்ய வேண்டும். இவைதான் நோய் நொடியில்லா, மருந்தில்லா ஆரோக்கிய வாழ்விற்கு அடித்தளம்.

குறிப்பாக இன்றைக்கு பலரின் இரவுப் பொழுதை தூக்கத்துக்கு பதிலாக சமூக வலைதளங்களும், தொலைக்காட்சிகளுமே கைப்பற்றுகின்றன. இதனால் தூக்க நேரம் குறைகிறது. பொதுவாக நம் தூக்க நேரம் குறைய நம் உடலில் வெப்பம் அதிகமாகும். அதனால் அடுத்தடுத்து உடல் உறுப்புகளின் செயல்பாடுகளில் சிக்கல் ஏற்பட்டு, பல்வேறு உடல்நலப் பிரச்னைகள் ஏற்படும். எனவே சீக்கிரம் படுத்து உறங்கி, சீக்கிரம் எழுவதே சிறந்தது.

2. குளிர்ந்த நீரில் குளியல்!


இன்றைக்கு பாத் ரூமில் ஹீட்டர் இருப்பதைத்தான் பலரும் விரும்புகின்றனர். பொதுவாக நம் உடல் வெப்பமாக இருப்பதால், உடல் சூட்டைத் தணிக்க குளிர்ந்த நீரினைக் கொண்டு குளிப்பதும், தூய்மையான குளிர்ந்த நீரை குடித்து வியர்வையின் வழியாக சூட்டை வெளியேற்றுவதுமே வழிகள். மாறாக சூடான நீரால் குளிப்பதால் உடல் மேலும் சூடாவதுடன், சோம்பல் உணர்வும் ஏற்படும்.

அருவியில், ஆறு/குளத்தில், வீட்டில் குளிப்பது என மூன்று வகையான குளியல்கள் உள்ளன. அதில் நீர் நம்மை அடிக்கும் குளியலான அருவியில் குளிப்பதுதான் உடல் செல்களை நன்றாகச் செயல்படத்தூண்டும். அடுத்து நாம் நீரினை அடிக்கும் நீச்சல் செய்யும் முறையான ஆற்றில்/குளத்தில் குளிப்பதாலும் உடலுக்கு புத்துணர்வு கிடைக்கும். இவ்விரண்டு முறைகளையும் இன்றைய இயந்திரமயமான உலகில் பெரும்பாலானோரால் கடைபிடிப்பது கடினம் என்பதோடு, நகரப்பகுதியினரால் செய்யவும் முடியாது. அதனால் மூன்றாவதாக வீட்டில் குளிப்பதுதான் ஒரே தீர்வு.

குளிப்பதே உடல் சூட்டைத் தணிப்பதற்காக என்பதால், எடுத்தவுடனே தலையில் நீர் ஊற்றுவதால் உடல் சூடு மீண்டும் கால் பாதத்துக்குதான் செல்லும். அதனால் முதலில் கால் பாதத்தில் இருந்து மேல் பாகங்களில் படுமாறு ஊற்றி இறுதியாக தலைக்கு தண்ணீரை ஊற்ற வேண்டும். இப்படி தினமும் காலையில் 6 - 7 மணிக்குள் குளித்துவிட வேண்டும்.

3. உடல் மீது சூரிய ஒளிபடுதல்!


தலைக்கு குளித்து சரியாக தலையை துவட்டாமல் விட்டுவிட்டால் தலையில் நீர் கோர்த்து, தலை பாரம், தலைவலி போன்ற பிரச்னை ஏற்படலாம். அதனால் குளித்த பின்னர் பத்து நிமிடங்கள், நம் உடல் மீது சூரிய ஒளி படும்படி நிற்பதால் உடலில் இருக்கும் தேவையற்ற நீர் வெளியேறிவிடும்.

இன்றைக்கு சிறுவர் முதல் பெரியவர்கள் வரை நம்மிள் பெரும்பாலானோருக்கும் அதிக உடல்நலக்குறைபாடுகள் வருவதற்கு காரணமே, சூரிய ஒளி நம்மீது படாததுதான். காலையில் 6 - 8 மணி நேரத்திற்குள், 3 - 10 நிமிடங்கள் வரை மிதமான சூரிய ஒளி நம் உடல் மீது படுமாறு நிற்கலாம். சூரிய ஒளி நம் உடல் மீது படுவதால், இரத்த ஓட்டம் சீராக இயங்கும். உடலில் உள்ள லட்சக்கணக்கான செல்களும் நன்றாக வேலை செய்யும். தோல் நோய்கள் வரவு கட்டுப்படும்.

தினமும் நம் உடல் மீது சூரிய ஒளி படவேண்டும் என்பதற்குத்தான், சூரிய நமஸ்காரம் செய்யும் முறையை நம் முன்னோர்கள் கடைபிடித்தனர்.

4. காலை உணவு சாப்பிடுதல்!

ஒரு நாளைக்கு நம் உடலுக்குத் தேவையான ஆற்றலில், அதிகபட்ச ஆற்றலைக் கொடுப்பவை காலை உணவுதான். மாறுபட்ட உணவு முறைகள், துரித உணவுகளைச் சாப்பிடுவதால் காலை நேரம் பலருக்கும் பசி எடுப்பதில்லை. பலரும் தெரிந்தே காலை உணவைத் தவிர்க்கின்றனர். இதனால் பலருக்கும் அடிக்கடி உடல் நலன் பாதிக்கப்படுகிறது.

காலை நேரம் சிறுதானிய உணவுகள், அதிகம் எண்ணெய் சேர்க்கப்படாத உணவுகள் சாப்பிடுவதே சிறந்தது.

Courtesy: Vikatan

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Previous Page Next Page Home

எமது தளத்தின் புதிய தகவல்களை மின்னஞ்சலில் பெற

Guestbook

உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு ஸ்டெடி மெடிரியலை இ.மெயிலில் இலவசமாக பெறுங்கள்.
இமெயிலை பதிவு செய்ய இங்கே சொடுக்கவும்
இமெயில் இல்லாதவர்கள் புதிய இமெயில் முவரியை பெற