இடுகுறிப்பெயர் :
- நம் முன்னோர்கள் எந்தக் காரணமும் கருதாமல் ஒரு பொருளுக்குக் குறியீடாக இட்ட பெயரே இடுகுறிப்பெயர். காரணம் அறியவியலாப் பெயர்கள் எல்லாம் இடுகுறிப்பெயர்களே.
- மண், நாய், கோழி, மலை, காடு, மாடு என்பன இடுகுறிப்பெயர்களே.
இடுகுறிப் பொதுப்பெயர் :
- மலை என்பது அனைத்து மலைகளுக்கும் பொதுப்பெயர்.
- காடு என்பது அனைத்துவகைக் காடுகளுக்கும் பொதுப்பெயர்.
- மாடு என்பது பல்வகை மாடுகளுக்கும் பொதுப்பெயர்.
- இவ்வாறு அனைத்துக்கும் பொதுவாக வரும் இடுகுறிப்பெயர்களை இடுகுறிப் பொதுப்பெயர் எனக் கூறுவர்.

இடுகுறிச் சிறப்புப்பெயர் :
- ‘மரம்’ என்னும் சொல் மா, பலா, வாழை, தென்னை முதலான மரவகை அனைத்திற்கும் இடுகுறிப்பெயராய்ப் பொதுவாக வரும்.
- ‘தென்னை’ என்னும் சொல் ஒரு காரணமும் இன்றி, இடுகுறிப்பெயராய் நின்று, ஒரு பொருளுக்கே (தென்னைமரம்) சிறப்பாய் வருவதனால் இடுகுறிச் சிறப்புப் பெயராயிற்று.
காரணப்பெயர்:
- காரணம் கருதி இடப்பட்ட பெயர்கள் காரணப்பெயர்கள் எனப்படும்.
- தமிழில் காரணப்பெயர்களே மிகுதியாக உள்ளன. பிறமொழிகளில் இடுகுறிப்பெயர்களே மிகுதியாக உள்ளன.
- பறவை (பறப்பதனால்), வளையல் , செங்கல் , முக்காலி, கரும்பலகை எனப் பலவற்றைக் கூறலாம்.
காரணப் பொதுப்பெயர் :
- ‘பறவை’ என்னும் சொல்லை எடுத்துக்கொள்வோம். பறப்பதனால் பறவை எனக் காரணம் கருதி வழங்கும் பெயராயிற்று.
- காகம், குயில், புறா, கிளி ஆகிய அனைத்தையும் ‘பறவை’ என்னும் பொதுச்சொல்லால் அழைக்கிறோம். அதனால், இதனைக் காரணப் பொதுப்பெயர் என்கிறோம்.
காரணச் சிறப்புப் பெயர் :
- வளையல் என்னும் சொல் காரணச் சிறப்புப் பெயராகும்.
- வளையல் போலவே சிலபொருள் வளைந்து வட்டமாக இருக்கும். இருப்பினும், அவையெல்லாம் வளையல் என அழைக்கப்படுவது இல்லை. இருப்பினும் இச்சொல், கையில் அணியும் வளையலை மட்டுமே குறிப்பதனால், காரணச் சிறப்புப் பெயர் ஆயிற்று.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக